‘விட்டால் கிடா வெட்டி கறி விருந்தும் வைப்பார்கள்!’ - பள்ளியில் பிறந்த நாள் கொண்டாடிய அமைச்சரை பதம் பார்க்கும் பாஜக!

14 hours ago 4

Last Updated : 22 Sep, 2025 09:49 AM

Published : 22 Sep 2025 09:49 AM
Last Updated : 22 Sep 2025 09:49 AM

<?php // } ?>

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது பிறந்த நாளை அரசு மேல் நிலைப்பள்ளியில், திமுக கொடி கலரில் தயாரான கேக்கை வெட்டி கொண்டாடிய விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் பஞ்சாயத்துக்கு இழுத்து அரசியலாக்கிக் கொண்டிருக்கிறது பாஜக.

திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ-வும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் 73-வது பிறந்த நாள் 19-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதை வித்தியாசமாக கொண்டாட நினைத்த அவரது ஆதரவாளர்கள், ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்தனர். இதற்காக அங்கு வந்த அனிதா ராதாகிருஷ்ணனை பள்ளி மாணவ - மாணவியர் வரிசையில் நின்று வரவேற்றனர்.

இதையடுத்து, தனது உருவம் பொறித்த கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார் அமைச்சர். இதேபோல், ஆறுமுகநேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், திமுக கட்சிக் கொடியின் கலரில் தயாராகி இருந்த கேக்கை வெட்டி மகிழ்ந்தார் அமைச்சர். அப்போது, மாணவிகளுக்கு அமைச்சரும் அமைச்சருக்கு மாணவிகளும் பரஸ்பரம் கேக்கை ஊட்டிக் கொண்டதுடன், மாணவிகள் அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் பாடினர்.

இந்த விவகாரத்தை வில்லங்கமாக்கிய பாஜக-வினர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட தமிழக பாஜக-வின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ‘பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸுக்கு இந்த விவகாரம் தெரியுமா? அவரின் ஒப்புதலோடு தான் பள்ளி மாணவர்கள் அமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடினார்களா?

மாவட்ட அமைச்சர்கள் குறுநில மன்னர்களாக செயல்படுவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கிறாரா? இந்த விவகாரத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டும் என அன்பில் மகேஸ் கோரிக்கை விடுக்க வேண்டும். அல்லது தனது துறையை தன்னால் நிர்வகிக்க முடியவில்லை என்று ஒப்புக்கொண்டு அவர் பதவி விலக வேண்டும்’ என சீறினார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவரான ஆர்.சித்ராங்கதன், “பாரத பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாளை தூய்மைப்பணி செய்தும், ரத்த தானம் செய்தும் கொண்டாடினோம். ஆனால், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அரசுப் பள்ளிகளில் கேக் வெட்டி தனதுபிறந்த நாளை கொண்டாடி உள்ளார். இதற்காக பள்ளி மாணவ - மாணவியர் நீண்ட நேரம் காத்திருந்துள்ளனர்.

அரசுப் பள்ளியில் அமைச்சர் தனது கட்சி அடையாளத்துடன் கூடிய கேக்கைவெட்டி பிறந்த நாள் கொண் டாடியது கண்டிக்கத்தக்கது. இப்படியே விட்டால் நாளை பள்ளிக்குள் கிடா வெட்டி கறி விருந்தும் வைப்பார்கள். இப்போது இதை கண்டிக்கா விட்டால் மற்ற பள்ளிகளிலும் இப்படி நடக்க முன்னுதாரணமாகி விடும். எனவே, அந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் மீது ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஆர்.சித்ராங்கதன்

இதுகுறித்து அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டதற்கு, “அவர்கள் சொல்வது போல் எல்லாம் நடக்கவில்லை. பேசுபவர்கள் எதையாவது பேசிக்கொண்டே தான் இருப்பார்கள்” என முடித்துக் கொண்டார். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளோ, “அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை; விசாரிக்கிறோம்” என்று எஸ்கே ஆனார்கள். ஆனாலும், அரசுப்பள்ளியில் அமைச்சர் கேக் வெட்டிக் கொண்டாடியதும் அவருக்கு பள்ளிப் பிள்ளைகள் பிறந்த நாள் வாழ்த்துப் பாடவைக்கப்பட்டதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை யாராலும் மறைக்க முடியவில்லை.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...

Follow

FOLLOW US

தவறவிடாதீர்!

Read Entire Article