யுடியூப்பில் விமர்சனம்:
ரசிகர்களின் கையில் எப்போது ஸ்மார்ட்போன் வந்து அதில் youtube எல்லோரிடமும் பிரபலமானதோ, அப்போது முதலே அதில் நிறைய சாதக, பாதகங்களும் உருவானது. புதிதாக ரிலீஸாகும் திரைப்படன்களை பலரும் யுடியூப்பில் விமர்சனம் செய்து வீடியோ போட்டார்கள். அதேநேரம், திரைப்படங்கள் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்கள் அந்த திரைப்படத்தின் வசூலை பாதிக்க துவங்கியது.
ஒரு படம் ரசிகர்களுக்கு பிடிக்கும்படி நன்றாக எடுக்கப்பட்டிருந்தால் எப்படிப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் அந்த படத்தின் வெற்றியை தடுக்க முடியாது என்பது உண்மைதான் என்றாலும் சில படங்களை நெகட்டிவ் விமர்சனங்கள் காலி செய்து விடுகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகவே இருக்கிறது.
விமர்சனத்தால் பாதிக்கும் வசூல்:
இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாகி முதல் காட்சி முடிந்த உடனேயே விமர்சனங்களை youtube-யில் போட்டு விடுகிறார்கள். அதிலும் நிறைய பேர் வன்மத்தோடு அலைகிறார்கள். படத்தில் இருக்கும் பாசிட்டிவ் பற்றி அதிகம் பேசாமல் நெகடிவ் பற்றிய அதிகம் பேசுகிறார்கள். youtube-ல் விமர்சனங்களை பார்த்துவிட்டு தியேட்டருக்கு போகலாம் என நினைக்கும் ரசிகர்கள் இந்த விமர்சனங்களை பார்த்துவிட்டு தியேட்டருக்கு போவதை தவிர்த்து விடுகிறார்கள். இது படத்தின் வசூலை பாதிக்கிறது.

கடந்த சில வருடங்களாகவே பெரிய நடிகர்களின் படங்களுக்கு நெகட்டிவான விமர்சனங்களை youtube-யில் பலரும் சொல்கிறார்கள். அதற்கு பின்னணியில் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒரு நடிகரே இணைய கூலிப்படைகளை வைத்து தனக்கு போட்டியான நடிகரை அல்லது தனக்கு பிடிக்காத நடிகரின் படம் வெளியாகும் போது அப்ப்டத்திற்கு எதிராக பேச வைக்கிறார் என்கிறார்கள். அதேபோல், தயாரிப்பாளர்களே அதிக ஃபாலோயர்ஸ்களை வைத்திருக்கும் யுடியூபர்ஸ்களுக்கு பணம் கொடுத்து படத்தை பற்றி பாசிட்டிவ் விமர்சனங்களை பரப்புகிறார்கள் என்றும், பணம் கொடுக்கவில்லை என்றால் யுடியூபில் விமர்சனம் செய்வதையே தவிர்த்துவிடுகிறார்கள் என்கிற கருத்துக்களும் உலவுகிறது.
புளூசட்டமாறனின் விமர்சனம்:
Youtube ல் விமர்சனம் சொல்பவர்களில் முக்கியமானவர் புளூசட்டை மாறன். இவர் ஒரு படத்தை நன்றாக இருக்கிறது என்று சொன்னால்தான் ஆச்சரியம். கலை படங்களை மட்டுமே விரும்பும் இவர் கமர்சியல் மசாலா படங்களை தொடர்ந்து குப்பை என சொல்லி வருகிறார். விஜய், அஜித், ரஜினி, கமல் என யாருடைய படமாக இருந்தாலும் சரி அதை ‘குப்பை’ என்று மட்டுமே விமர்சிப்பார். விஜயின் லியோ, அஜித்தின் வலிமை, ரஜினியின் ஜெயிலர், கூலி போன்ற படங்களை இவர் மிகவும் மோசமாக விமர்சித்து பேசியிருந்தார். எனவே, யூடியூபில் சொல்லப்படும் விமர்சனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சங்கத்திடமும் தயாரிப்பாளர் சங்கத்திலும் பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

கோபப்பட்ட வடிவேலு:
இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டிடம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ள வந்த நடிகர் வடிவேலு அந்த மேடையில் பேசும்போது ‘விமர்சனம் என்கிற பெயரில் ஒரு பத்து பேர் ஒட்டுமொத்தமாக சினிமாவையே அழித்து வருகிறார்கள். சில யுடியூபர்ஸ்களை போர்க்கால அடிப்படையில் உண்டு இல்லாமல் செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழ் சினிமாவை காப்பாற்ற முடியாது’ என பேசி இருந்தார். தற்போது அது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
இந்த செய்தியை தனது எக்ஸ தளத்தில் பகிர்ந்துள்ள புளூசட்டை மாறன் ‘கேங்கர்ஸ் படத்தில் காமெடி பண்ணாலும் படம் ஓடவில்லை. மாரீசன் படத்தில் சீரியஸாக நடித்தும் ஓடவில்லை. எல்லாத்துக்கும் காரணம் யூடியூபர்பஸ்தான். அவங்க மேல ஏவுகணை தாக்குதல் நடத்தி எல்லாத்தையும் அழிச்சிட்டா அதன்பின் மொக்கை படங்களும் சூப்பர் ஹிட் அடித்து விடும். இப்படிக்கு இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ என நக்கலடித்திருக்கிறார்.
பி.ஏ. பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.