புதுச்சேரியில் இனி தொழில் தொடங்க கால வரம்புக்குள் தடையில்லா ஆணை வழங்காவிட்டால் அபராதம்!

4 days ago 4

Last Updated : 18 Sep, 2025 05:31 PM

Published : 18 Sep 2025 05:31 PM
Last Updated : 18 Sep 2025 05:31 PM

<?php // } ?>

புதுச்சேரி: புதுச்சேரியில் தொழில்கள் தொடங்க கால வரம்புக்குள் தடையில்லா ஆணையை அரசுத் துறைகள் வழங்காவிட்டால் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

யூனியன் பிரதேசமான புதுவையில் தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசின் சலுகைகள் கடந்த காலத்தில் அதிகமாக இருந்தது. இதனால் புதுவையில் அதிகளவில் தொழில்களைத் தொடங்கினர். இந்த சலுகைகளை மத்திய அரசு படிப்படியாக நிறுத்தியது. இதனால் புதிதாகப் புதுவையில் தொழில் தொடங்க யாரும் முன்வரவில்லை.

அதோடு தொழில்களைத் தொடங்க அரசின் பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டியுள்ளது. இந்த அனுமதியைப் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், தொழில் முனைவோர் புதுவையில் தொழில்களைத் தொடங்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் தொழில்களைத் தொடங்க அனுமதி வழங்க ஒற்றைச் சாளர முறைக்கு அரசு அனுமதியளித்தது. இருப்பினும் கோப்புகளுக்கு உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை.

இதையடுத்து, அரசுத் துறைகளுக்கு அனுமதி வழங்க கால வரம்பு நிர்ணயித்து வணிகம் செய்தலை எளிதாக்கும் சட்ட முன்வரைவு புதுவை அரசு கொண்டு வந்தது. இதில் பல்வேறு திருத்தங்களுடன் மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இந்த சட்ட மசோதா புதுவை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. தொழில் துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டசபையில் மசோதாவைத் தாக்கல் செய்தார்.

அந்த மசோதாவின் விவரம்: சேவைகள் வழங்கும் சட்டத்தில் கால வரம்பை வரையறுத்தல் முக்கிய சீரமைப்பில் ஒன்று. இந்த சட்டத்தின்படி புதுவை அரசில் உள்ள தொழில், மின்சாரம், உள்ளாட்சி, சுற்றுச்சூழல், வருவாய், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் தடையில்லா ஆணை வழங்க 5 முதல் அதிகபட்சமாக 21 நாட்கள் வரை காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பை மீறினால் சட்டப் பிரிவு 8 (1)ன்படி அபராதம் விதிக்கவும் மசோதா வழிசெய்துள்ளது.

மேலும், நகராட்சி மற்றும் கிராம, கொம்யூன் பஞ்சாயத்து அமைப்புகள் வழங்கும் வர்த்தக உரிமம் 5 ஆண்டுகள் செல்லுபடியாகும், கள ஆய்வு தேவையில்லை. தொழில் முனைவோருக்கு அனுமதிக்கப்பட்ட நிலப் பயன்பாடு உரிமங்களை உடனடி மற்றும் எளிய முறையில் வழங்கப்படும். குடியிருப்பு, வணிக மற்றும் வேளாண்மை மண்டலங்களில், நிலப் பயன்பாட்டை மாற்றத் தேவையின்றி குறு, சிறு, நடுத்தர தொழில்கள் தொடங்கலாம். தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள், தொழில் மண்டலங்களிலும் தொழில் எஸ்டேட்டுகளிலும் அனுமதி இல்லாமல் அமைக்கலாம்.

தொழில்கள் அமைக்க குறைந்தபட்ச சாலை அகலம் 5 மீட்டரில் இருந்து 4.5 மீட்டராகக் குறைக்கப்படும். அனைத்து கட்டிட வகைகளுக்கும் கட்டிட அனுமதி மற்றும் இருப்பு சான்றிதழ் இணைய வழியில் வழங்கும் முறை அறிமுகம். 6 குடியிருப்பு யூனிட்டுகள் வரை கொண்ட குடியிருப்புகளுக்கும், 500 ச.மீ. வரை வணிக கட்டிடங்களுக்கும், தொழில் கட்டிடங்களுக்கும் இருப்பு சான்றிதழ் தேவையில்லை.

பெண்கள் தொழிற்சாலைகளில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இரவு நேரங்களில் வேலை செய்ய அனுமதி தரப்படும். 50 பணியாளர்கள் கீழ் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு, புதுவை கடைகள் நிறுவனங்கள் சட்டம், 1964-ல் இருந்து விலக்கு அளிக்கப்படும். தீ பாதுகாப்பு தடையில்லா சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் ஒரு ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும்.

மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகளுக்கு நேரடி கண்காணிப்புடன் ஆன்லைன் விண்ணப்பம் வழங்கப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வணிகத் தொடக்கத்தை எளிமைப்படுத்த, குறிப்பிட்ட அனுமதிகள் மற்றும் ஆய்வுகளிலிருந்து 3 ஆண்டு விலக்கு வழங்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவை அமைச்சர் நமச்சிவாயம் அறிமுகப்படுத்தி முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து பேரவைத்தலைவர் செல்வம் குரல் வாக்கெடுப்பு நடத்தி சட்டம் நிறைவேறியதாக அறிவித்தார்.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...

Follow

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

Read Entire Article