Last Updated : 17 Sep, 2025 06:54 AM
Published : 17 Sep 2025 06:54 AM
Last Updated : 17 Sep 2025 06:54 AM

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில், முதன்முறையாக புதிய மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு பயணம் மூலமாக ரயில்வேக்கு ரூ.18.75 லட்சம் வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு ரயில்வேயில், சென்னை ரயில்வே கோட்டத்தில், சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த, கடந்த 2020-ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, நவீன வசதிகள் கொண்ட சரக்கு ரயில்கள் அறிமுகப்படுத்தல், சரக்குகளை கையாளுவதற்கு ஏற்ற ரயில் நிலையத்தை அமைத்தல், வணிக மேம்பாட்டு குழு அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, சரக்கு ரயில் போக்குவரத்து வேகமாக வளரத் தொடங்கியது. தற்போது, சென்னையில் இருந்து நாட்டின் பல நகரங்களுக்கு சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் முதன்முறையாக, புதிய மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் ஏற்றி அனுப்பி சாதனை படைக்கப்பட்டது.
மான்ட்ரா எலக்ட்ரிக் (முருகப்பா குழுமம்) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மின்சார ஆட்டோக்கள், சரக்கு ரயிலில் ஏற்றி ஆந்திரா மாநிலம் தடா ரயில் நிலையத்திலிருந்து, மேற்குவங்கம் மாநிலம் ரங்கபாணிக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: இதன்மூலம், சரக்கு வர்த்தகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை சென்னை ரயில்வே கோட்டம் தொடங்கியுள்ளது. மேலும் இது, மின்சார வாகனங்களை பெரிய அளவில் ரயில் மூலம் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. ஒவ்வொரு சரக்கு ரயில் போக்குவரத்தின் மூலமும் ரூ.18.75 லட்சம் வருவாய் கிடைக்கும்.
நடப்பு நிதியாண்டில் 8 சரக்கு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.1.50 கோடி ரயில்வேக்கு வருவாய்கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை வழிப் போக்குவரத்துடன் ஒப்பிடும் போது, ரயில் மூலம் மின்சார வாகனங்களைக் கொண்டு செல்வதால், கரியமில வாயு வெளியேற்றத்தை கணிசமாகக் குறைக்கிறது. இதன்மூலம், ரயில்வே நாட்டின் பசுமைப் போக்குவரத்து சேவையாக தனது பங்கை உறுதி செய்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...
FollowFOLLOW US
தவறவிடாதீர்!
- கைலாஷ் யாத்திரை ரத்தான விவகாரம்: முன்பதிவு செய்தவருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு - நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
- சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியின் 108-வது பிறந்தநாள்: முதல்வர், அரசியல் தலைவர்கள் மரியாதை
- 12,255 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தம்
- சென்னை, புறநகர் மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை: தென் சென்னையில் 12 செமீ பதிவு