Last Updated : 14 Sep, 2025 04:16 PM
Published : 14 Sep 2025 04:16 PM
Last Updated : 14 Sep 2025 04:16 PM

லண்டன்: சனிக்கிழமை அன்று பிரிட்டன் நாட்டின் லண்டனில் தீவிர வலதுசாரி செயல்பாட்டாளரான டாமி ராபின்சன் ஒருங்கிணைத்த ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியில் சுமார் 1.10 லட்சம் பேர் பங்கேற்றனர். அப்போது பேரணியில் பங்கேற்ற ஒரு குழுவினர் போலீஸார் உடன் மோதலில் ஈடுபட்டனர்.
இந்த பேரணி லண்டன் நகரின் தேம்ஸ் நதிக்கரையை ஒட்டிய பிக் பென் பகுதி முதல் வாட்டர்லூ பகுதி வரை நடைபெற்றது. இந்த பேரணிக்கு ஆதரவு அளித்து, அதில் பங்கேற்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராகவும், அவர்கள் தேசிய அடையாளத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் முழக்கமிட்டனர்.
அதே நேரத்தில் டாமி ராபின்சனின் பேரணிக்கு எதிராக ‘பாசிசத்துக்கு எதிரான பேரணி’ என்ற போராட்டத்தை இனவெறிக்கு எதிரானவர்கள் மேற்கொண்டனர். இதில் சுமார் 5,000 பேர் பங்கேற்றனர். தங்களது பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை வலதுசாரி ஆதரவாளர்கள் நெருங்காத வகையில் போலீஸார் தடுக்க முயன்றபோது மோதல் வெடித்தது. அப்போது போலீஸார் மீது தாக்குதல் நடந்துள்ளது. போலீஸாரை நோக்கி பாட்டில்களும் எறியப்பட்டுள்ளன.
அதன் பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாருக்கு தலைக்கவசம் மற்றும் கவச உடைகள் வழங்கப்பட்டன. இதை காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு பேரணியின் போது அத்துமீறி செயல்பட்டவர்களை போலீஸார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் செல்வாக்கு பெற்ற தீவிர வலதுசாரி செயல்பாட்டாளராக டாமி ராபின்சன் அறியப்படுகிறார். இவர், தேசியவாத மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு இங்கிலிஷ் டிபேன்ஸ் லீக்கை நிறுவி உள்ளார். ஐரோப்பா முழுவதும் வெளிநாடுகளில் இருந்து இடம்பெயர்ந்த குடியேறிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து பரவலாக பேசி வருகின்றனர். அதை முன்னிறுத்தி டாமி ராபின்சனின் போராட்டம் அமைந்தது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அரசியல்வாதியும், வலதுசாரி ஆதரவாளருமான எரிக் ஜெம்மோர் கூட்டத்தினர் மத்தியில் பேசிய போது, "தெற்கிலிருந்து வரும் மக்களாலும், முஸ்லிம் கலாச்சாரத்தாலும் நமது முன்னாள் காலனிகளால் நாம் இருவரும் காலனித்துவ ஆதிக்கத்துக்கு உள்ளாகிறோம். இருவருக்கும் ஒரே பாதிப்புதான்" என்றார்.
‘பிரிட்டிஷ்காரராக இருப்பதில் ஏதோ அழகு இருக்கிறது. இப்போது இங்கு நடப்பது பிரிட்டனின் அழிவு. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு குடியேற்றம் நடக்கிறது. தொடக்கத்தில் இது மெதுவாக நடந்தது. இப்போது வேகமாகி உள்ளது’ என எக்ஸ் சமூக வலைதள உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்தார்.
இங்கிலீஷ் கால்வாயைக் கடந்து படகுகள் மூலம் மக்கள் பிரிட்டனுக்குள் நுழைவது குறித்து பலரும் கவலை கொண்டுள்ள நிலையில் குடியேற்றத்துக்கு எதிரான போராட்டம் பரவலாகி உள்ளது. புகலிடம் தேடி வரும் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள கட்டிடத்துக்கு அருகிலும் குடியேற்றத்தை எதிர்ப்பவர்கள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...
FollowFOLLOW US
தவறவிடாதீர்!
- மழை பெய்தாலே வெள்ளக்காடாக மாறும் மதுரை சாலைகள் - என்று தீரும் இந்த பிரச்சினை?
- ''ஊழலை முடிவுக்குக் கொண்டுவர பாடுபடுவேன்'' - நேபாள பிரதமர் சுசீலா கார்கி உறுதி
- பட்டாசு தடையை நாடு முழுக்க ஏன் நீட்டிக்க கூடாது? - உச்சநீதிமன்ற கேள்வியால் உற்பத்தியாளர்கள் கலக்கம்
- பழி சுமத்தலும் ஜனநாயக மரபின் வீழ்ச்சியும் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 56