கொரில்லா மார்க்கெட்டிங் என்றால் என்ன?


கொரில்லா சந்தைப்படுத்தல் என்றால் போட்டி பிராண்டுகளை சேதப்படுத்தும் போர்முறை மார்க்கெட்டிங் இல்லை.

.

விடுதலைப்புலிகளின் செயல்பாடுகளைப் பார்த்து எம்ஜிஆரே ஒரு கட்டத்தில் திகைத்துப்போனார் - யுத்தம், காடு, மார்கெட்டிங் என்று களம் எதுவானாலும் அதில் "திடுக்" அம்சம்தான் அனைத்து கொரில்லாக்களுக்கும் அடிப்படைப் பலம்.

கொரில்லா சந்தைப்படுத்தல் என்றால் போட்டி பிராண்டுகளை சேதப்படுத்தும் போர்முறை மார்க்கெட்டிங் இல்லை.

  • கொஞ்சம் தந்திரம், கொஞ்சம் எந்திரம், கொஞ்சம் தகவல் நுட்பம். வழக்கத்திற்கு மாறான மார்க்கெட்டிங் வடிவத்தில், குறைந்த செலவில் நிறைந்த பிராண்ட் விழிப்புணர்வு . இதுதான் கொரில்லா மார்க்கெட்டிங்.
  • 1984ல் விளம்பர குரு கான்ராட் லெவின்சன் 'கொரில்லா விளம்பரம்' (Guerrilla Advertising) புத்தகத்தில் இந்த பதத்தை அறிமுகப்படுத்தினார்.
  • கொரில்லா யுத்தம்போல் ஒழுங்கற்ற, தந்திரோபாய உத்திகளுடன் சந்தைப்படுத்துவதே கொரில்லா முறை.
  • நுகர்வோரை ஆச்சரியக் கடலில் மூழ்கடித்து, அவர்கள் மனதில் ஒரு அழியாத பிராண்ட் தோற்றத்தை உருவாக்கி, அதில் லாப முத்தெடுப்பதே நோக்கம்.

இரண்டு இந்திய உதாரணங்களால் இதை விளக்கலாம்.

1. மாப்பிள்ளை அவருதான், ஆனா சட்டை என்னோடது - பெப்சி விளம்பரம்

1996. இந்திய துணைக் கண்டத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்த முடிவானது. 70 கோடி மக்களின் கவனத்தை ஈர்க்கப்போகும் நிகழ்வு .

இந்தியாவின் நுகர்வோர் சந்தையை கைப்பற்றுவதில் இது ஒரு விளம்பர போரையே தொடங்கி வைத்தது. உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ விளம்பரதாரராக பெப்சி, கோகோ கோலா போன்ற ஜாம்பவான்கள் போட்டி போட்டன.

அதிகாரப்பூர்வ உரிமைகளை கோகோ கோலா வென்றது. ஆனால் பெப்சிகோ சரணடையத் தயாராக இல்லை.

"அதிகாரப்பூர்வமாக எதுவும் இல்லை" (Nothing official about it) என்றொரு பிரச்சார பீரங்கியை எடுத்துவந்து முழக்கி தள்ளி விட்டார்கள்.

பெப்சியின் இந்த பிரச்சார உத்தி பொதுமக்களின் கற்பனையை வெகுவாக கவர்ந்தது. இந்த களேபரத்தில் எல்லோரும் "கல்யாண மாப்பிள்ளையை" மறந்து விட்டார்கள்.

அதிகாரப்பூர்வ விளம்பரதாரர் கோக் கொடுத்த விருந்தில், கேட் ஏறிக்குதித்த பெப்சி "கல்யாண சமையல் சாதம்" என்றெல்லாம் பாட்டுப்பாடி, விருந்துண்டு, காசும் பார்த்துவிட்டது.

உலக விளையாட்டு சந்தைப்படுத்தல் வரலாற்றில் கொரில்லா மார்கெட்டிங்க்கு இது மிகவும் பிரபலமான உதாரணம்.

2. விலையில்லா கடை

திடீரென்று ஒரு நாள், பரபரப்பான மும்பை மால் ஒன்றில் இந்த விலையில்லா கடை (Free Store) ஆரம்பிக்கப்பட்டது.

மொத்தம் 87 ஐட்டங்கள். அழகிய விலையுர்ந்த பீங்கான் பரிசுப்பொருட்கள். எல்லாம் இலவசம். வருகை தருபவர்கள் எதை வேண்டுமென்பதை அலமாரியிலிருந்து பணம் தராமல் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.

இருந்தாலும் ஒருவராலும் எடுத்துச் செல்ல முடியவில்லை. எல்லா பொருட்களும் அலமாரியுடன் பசையால் ஒட்டப்பட்டிருந்தது.

உடைக்காமல் எடுப்பது முடியாத காரியம் என்று தெரிந்த போதுதான் அது ஒரு பசை விளம்பரம் என்பதும் தெரிந்தது.

ஃபெவிகால் விளம்பரம்!

மொத்த 87 ஐட்டங்களையும் யாரும் எடுக்கமுடியவில்லை.

இந்த கொரில்லாப் பிரச்சாரத்தின் மூலம் மக்கள் மனதில் "ஃபெவிகால்"தான் இந்தியாவின் மிகவும் நம்பகமான பசை பிராண்ட்" என வலுவாக "ஒட்டிக்கொண்டது."

நேரடியாக, மறக்க முடியாத, திடுக்கிட வைத்த, ஆச்சரியக் கடலில் மூழ்கடித்த, விற்பனைப்பொருளின் முக்கிய நன்மையை தெளிவாக விளக்கிய - கொரில்லா மார்க்கெட்டிங்கு சிறந்த உதாரணம்.

?

இணையும் துணையும் பக்கவா பிளான் பண்ணி, வர்ற தேர்தலப்ப ஓட்டுச்சாவடிக்கு ஒரு கொரில்லா கடை ஆரம்பிங்க பாஸ்.

 

Comments