துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் 2022-க்கான ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட்டர் விருதை வென்றுள்ளார். கடந்த ஆண்டு முழுவதும் தனது அபார ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆண்டுதோறும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பாராட்டுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டுக்கான பரிந்துரைகள் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டன.
இதில் ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட்டர் விருதுக்கான பரிந்துரையில் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான், இங்கிலாந்தின் சாம் கரன் மற்றும் ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதில் மற்ற மூவரையும் பின்னுக்கு தள்ளி சூர்யகுமார் விருதை வென்றுள்ளார்.
2022-ல் சூர்யகுமார் யாதவ்: கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் மட்டுமே மொத்தம் 1,164 ரன்களை அவர் குவித்தார். மொத்தம் 31 போட்டிகளில் விளையாடி 2 சதம் மற்றும் 9 அரைசதம் பதிவு செய்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 46.56. ஸ்ட்ரைக் ரேட் 187.44. மொத்தம் 17 கேட்ச்களை பிடித்துள்ளார். 68 சிக்ஸர்களை விளாசி உள்ளார். இவரது அன்-ஆர்தோடக்ஸ் ஷாட்கள் மிகவும் பிரபலம். இவரை SKY என ரசிகர்கள் அழைப்பது வழக்கம்.
ஐசிசி வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் ரேணுகா சிங் வென்றுள்ளார். கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் 18 விக்கெட்டுகள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 22 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றி இருந்தார்.
GIPHY App Key not set. Please check settings