காஜியாபாத்: நேபாளத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த 4 இந்தியர்களின் உடல்கள் நேற்று அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டன.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து அந்த நாட்டின் போக்கரா நகருக்கு எட்டி ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 15-ம்தேதி காலையில் புறப்பட்டது. இதில் 5 இந்தியர்கள் உட்பட 68 பயணிகளும் விமானி உள்ளிட்ட 4 ஊழியர்களும் பயணம் செய்தனர். போக்காரா நகரில் புதிதாக திறக்கப்பட்ட விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது எதிர்பாராத விதமாக விழுந்து நொறுங்கியது. இதுவரை 70 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், 4 இந்தியர்களின் உடல்கள் நேற்று உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு சாலை மார்க்கமாக கொண்டுவரப்பட்டன. அப்போது மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் போலீஸார் உடன் இருந்தனர்.
விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை நேபாள ராணுவத்தினர் விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
GIPHY App Key not set. Please check settings