காங்டாக்: ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று சிக்கிம் மாநில அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் மக்கள்தொகை 140 கோடியை தாண்டிச்சென்றுள்ள நிலையில். உலக அளவில் மக்கள்தொகையில் 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. இருந்தபோதும், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் மக்கள்தொகை குறைவாகவே உள்ளது. அங்கு பிறப்பு விகிதம் குறைவாக உள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிக்கிமை சேர்ந்த பெண் அரசு ஊழியர்கள் ஒரு குழந்தைக்கும் அதிகமாக குழந்தைகள் பெற்றுக்கொண்டால் அரசின் சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை 6 லட்சத்து 10 ஆயிரத்து 577 ஆகும். இங்கு குழந்தை பிறப்பு விகிதம் 1.1 சதவீதமாக உள்ளது. எனவே, குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் சிறப்பு ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமங் அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியபோது, ‘‘பெண் அரசு ஊழியர்கள் 2-வது குழந்தை பெற்றுக்கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும். 3-வது குழந்தை பெற்றுக்கொண்டால் இரண்டு ஊதிய உயர்வு அளிக்கப்படும். சிக்கிம் மக்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொண்டால் பல நிதி உதவிகள் அளிக்கப்படும். குழந்தை பிறக்காத பெண்களுக்கு செயற்கை கருத்தரித்தல் (ஐவிஎஃப்) முறையில் சிகிச்சை அளிக்கும் வசதியை முன்னெடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. ஐவிஎஃப் முறையில் குழந்தை பெறும் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும். பேறுகால விடுப்பாக பெண் அரசு ஊழியர்கள் 365 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம். புதிதாக தந்தையாகும் ஆண்களுக்கு 30 நாள் விடுப்பு அளிக்கப்படும்.குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவே இந்த சலுகைகளை அறிவித்துள்ளோம்’’ என்றார்.
GIPHY App Key not set. Please check settings