‘ஆர்ஆர்ஆர்’ பட இயக்குநர் ராஜமவுலியை ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பாராட்டியிருந்த நிலையில், அவர் பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
‘டைட்டானிக்’, ‘அவதார்’ படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தைப் பார்த்து பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவருடனான சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட ‘ஆர்ஆர்ஆர்’ பட இயக்குநர் ராஜமவுலி, “‘ஆர்ஆர்ஆர்’ படத்தைப் பார்த்த ஜேம்ஸ் கேமரூனுக்கு படம் மிகவும் பிடித்துப் போனதால், அவர் தனது மனைவி சூசியிடம் படத்தைப் பார்க்குமாறு பரிந்துரைத்துள்ளார். பின்னர் மனைவியுடன் இணைந்து மீண்டும் ஒருமுறை படத்தைப் பார்த்திருக்கிறார். படம் குறித்து நீங்கள் உரையாடிய அந்த 10 நிமிடங்களை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நீங்கள் சொன்னது போல நான் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறேன். இருவருக்கும் நன்றி” என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இருவரும் பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வீடியோவின் தொடக்கத்தில் ஜேம்ஸ் கேமரூனிடம் பேசும் ராஜமவுலி, “டெர்மினேட்டர் முதல் டைட்டானிக் வரை உங்களது எல்லாப் படங்களும் மிகவும் பிடிக்கும்” என்கிறார். தொடர்ந்து பேசும் ஜேம்ஸ் கேமரூன், “உங்களது படங்களின் கதாபாத்திரங்களைப் பார்க்கும்போது உணர்ச்சி மிகுந்ததாக உள்ளது. நெருப்பு, நீர் என நீங்கள் படத்தினை சரியாக செட் அப் செய்துள்ளீர்கள். ஹீரோ என்ன செய்கிறார், ஏன் செய்கிறார் என கொஞ்சம் கொஞ்சமாக ரிவீல் செய்கிறீர்கள். நீங்கள் டாப் ஆஃப் தி வேர்ல்ட்” என புகழ்ந்திருக்கிறார். அதற்கு ராஜமவுலி, “நீங்கள் சொன்ன வார்த்தைகள் விருதைவிட பெரியது” என கூறியுள்ளார். இறுதியில் “ஹாலிவுட்டில் படம் எடுக்கும் எண்ணமிருந்தால் சொல்லுங்கள்; பேசுவோம்” என சொல்லிவிட்டு நகர்ந்தார் கேமரூன்.
GIPHY App Key not set. Please check settings