வெலிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனின் ராஜினாமா அறிவிப்பை அடுத்து, அடுத்த பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
கடந்த 2017ம் ஆண்டில் இருந்து நியூசிலாந்தின் பிரதமராக இருந்து வந்த ஜெசிந்தா ஆர்டென் பதவியை ராஜினமா செய்யப் போவதாக கடந்த வியாழக்கிழமை திடீரென அறிவித்தார். நியூசிலாந்தை தலைமை ஏற்று நடத்த இனியும் தன்னால் முடியாது என்றும் தனது சக்தி தீர்ந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஜெசிந்தாவின் அறிவிப்பை அடுத்து ஆளும் தொழிலாளர் கட்சியின் அடுத்த பிரதமர் வேட்பாளராக கிறிஸ் ஹிப்கின்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
44 வயதாகும் கிறிஸ் ஹிப்கின்ஸ், தற்போது அந்நாட்டின் அமைச்சராக இருக்கிறார். கடந்த 2008ம் ஆண்டு முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இவர், கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் கோவிட்-19 துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். காவல்துறை, கல்வி, பொது சேவை ஆகிய துறைகளின் அமைச்சராக இவர் தற்போது உள்ளார்.
இவர் நியூசிலாந்தின் பிரதமராக முறைப்படி பொறுப்பேற்கும் முன், தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்கான கூட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதில், இவர் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, ஜெசிந்தா தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஜெனரலுக்கு முறைப்படி அளிப்பார். அதன் பிறகு, மன்னர் மூன்றாம் சார்லசின் சார்பில், கவர்னர் ஜெனரல், கிறிஸ் ஹிப்கின்ஸ்-சை பிரதமராக நியமிப்பார்.
GIPHY App Key not set. Please check settings