தாவோஸ்: ராகுல் காந்தி முட்டாள் அல்ல என்றும் அவர் ஒரு புத்திசாலியான துடிப்புள்ள இளைஞர் என்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தின் தவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட ரகுராம் ராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ராகுல் காந்தி குறித்து பொதுமக்களுக்கு இருக்கும் பார்வை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரகுராம் ராஜன், ”அந்த பார்வை துரதிருஷ்டவசமானது. கடந்த 10 ஆண்டுகளாக நான் அவரோடு பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்திருக்கிறேன். அவர் ஒருபோதும் பப்பு (முட்டாள்) அல்ல. அவர் ஒரு புத்திசாலியான, துடிப்புள்ள இளைஞர்.
இந்தியாவுக்கான முன்னுரிமை எவை என்பது குறித்து சரியான புரிதல் மிகவும் முக்கியம். அடிப்படையான சவால்களை எதிர்கொள்வது, மக்களை மேலே உயர்த்துவது ஆகியவற்றுக்கு இந்த புரிதல் மிகவும் அவசியம். இவற்றைச் செய்வதற்கு ராகுல் காந்தி மிகவும் தகுதிவாய்ந்தவர் என்பது எனது கருத்து.” என தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரகுராம் ராஜன், ”இந்திய பொருளாதாரத்திற்கு 2023 மிகவும் கடினமான ஆண்டு. இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகின் பிற நாடுகளுக்கும் 2023 கடினமான ஆண்டாகத்தான் இருக்கும். எனினும், இந்தியாவைப் பொறுத்தவரை பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் அது தோல்வி அடைந்துவிட்டது.
கீழ் நடுத்தர வகுப்பு மக்களைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் பொருளாதார கொள்கை வகுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் கரோனா வைரஸ் காரணமாக அந்த வகுப்பினர்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு சாதகமான சூழல் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், இதில் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. ஏனெனில், இந்தியா உலகின் 5வது மிகப் பெரிய பொருளாதாரம். எனவே, அரசின் கொள்கை விரிவடைய வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.
GIPHY App Key not set. Please check settings