புதுடெல்லி: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெற்ற மகத்தான வெற்றியை கொண்டாடும் நோக்கில் அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாடீல், டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் மற்றும் எம்.பிக்களுக்கு இன்று இரவு விருந்தளிக்கிறார்.
குஜராத்தில் இந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக 7வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில் இதுதான் மிகப் பெரிய வெற்றி என்பதால், இதை கொண்டாடும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த ஆலோசனையின் அடிப்படையில் டெல்லியில் இன்று இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாஜக தலைவர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்கள் உள்ளிட்டோர் தங்கள் மனைவியுடன் இதில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளார்கள். புதுடெல்லியில் உள்ள ஜிம்கானா கிளப்-ல் நடைபெறும் இந்த விருந்தில் பங்கேற்க, ஒவ்வொருவருக்கும் தொலைபேசி மூலம் குஜராத் பாஜக தலைவர் சி.ஆர். பாடீல் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விருந்தில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வாரம் புதுடெல்லியில் நடைபெற்ற கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் குஜராத் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வெற்றிக்கு சி.ஆர். பாடீலின் தலைமை மிக முக்கிய காரணம் என்றும், அவரது தேர்தல் பணியை பின்பற்றுபவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
GIPHY App Key not set. Please check settings