in

ஓயாத லயோனல் மெஸ்ஸி


கத்தாரில் நடைபெற்ற பிஃபாவின் 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி 36 வருடங்களுக்குப் பிறகு மகுடம் சூடியது. உலகக் கோப்பை தொடரில் அர்ஜெண்டினா பட்டம் வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 1978 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் பட்டம் வென்றிருந்தது.

பிரான்ஸ் – அர்ஜெண்டினா மோதிய இறுதிப்போட்டி இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளிலேயே ‘ஆல் டைம் கிரேட்’ என கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வெற்றியின் மூலம் கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸியின் நீண்டகால கனவு நிறைவேறியுள்ளது. லா லிகா தொடரில் 10 முறை சாம்பியன் பட்டம், 4 முறை யுஏஇஎஃப் சாம்பியன்ஸ் லீக்கில் பட்டம், 7 முறை பாலோன் டி’ஓர் விருது, லீக் 1 பட்டம், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை பட்டம், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம், கோபா அமெரிக்காபட்டம், பைனலிசிமா தொடரில் கோப்பை என கால்பந்தில் அனைத்து கோப்பைகளையும் வென்று குவித்த லயோனல் மெஸ்ஸிக்கு உலக சாம்பியன் பட்டம் மட்டுமே எட்டாக்கனியாக இருந்து வந்தது.

தற்போது அந்த மணி மகுடமும் லயோனல் மெஸ்ஸியை அலங்கரித்துள்ளது. இதற்காக அவர் 16 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.இந்த பயணத்துக்கு ஊடாக கோபா அமெரிக்காவில் 3 முறையும், 2014-ம் ஆண்டு உலகக் கோப்பையிலும் 2-வது இடம் பிடித்து கோப்பையை மெஸ்ஸியால் கைப்பற்ற முடியாமல் போனது. கடந்த ஆண்டு ஜூலையில் கோபா அமெரிக்காவில் பட்டம் வென்ற மெஸ்ஸி அந்த வெற்றி பயணத்தை கத்தாருக்கும் கடத்தி வெற்றிகரமாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

பிரான்ஸ்அணியின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவுக்கு இரு கோல்கள் அடித்து அசத்தியிருந்தார் மெஸ்ஸி. பிரான்ஸ் அணி மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து அபாரமாக மீண்டு வந்து கடும் சவால் அளித்த போதிலும் மெஸ்ஸி எந்த ஒரு தருணத்திலும் பதற்றம் கொள்ளவில்லை.

இதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. அவர் உலகக் கோப்பையில் விளையாடிய ஆட்டங்களின் எண்ணிக்கை 26. இதில் கிடைக்கப்பெற்ற அனுபவம். இதற்கு முன்னர் மெஸ்ஸி பங்கேற்ற 4 உலகக்கோப்பைகளை விட கத்தார் உலகக் கோப்பையில் வித்தியாசமான மெஸ்ஸியை காண முடிந்தது. தொடர்முழுவதுமே அவர், எந்தவித அழுத்தமும் இல்லாமல்சுதந்திரமாக விளையாடினார். பந்துடன் அவருக்குண்டான தொடர்பு வலுவாக பிணைக்கப்பட்டிருந்தது.

உலகம் முழுவதும் கால்பந்து போட்டிகள் ஆதிக்கம் செலுத்தாத நாடுகளில் கூட இறுதிப் போட்டியை வெகுவாக கண்டுகளித்தனர். இதற்கு காரணம் மந்திரக்காரன் மெஸ்ஸியே. ஏனெனில் மெஸ்ஸிகால்பந்து உலகில் சாதிக்காதது ஏதுவும் இல்லை.அவர், உலக கோப்பையை மட்டுமே கைகளில் ஏந்தாமல் இருந்தார். அந்த மாயாஜாலமும் கத்தாரில் நிகழ்ந்துவிட்டது. இதன் மூலம் மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கை முழுமை பெற்றுள்ளது.

1986-ம் ஆண்டு அர்ஜெண்டினாவுக்கு கோப்பையை வென்று கொடுத்த டீகோ மரடோனாவை போன்று தற்போது மெஸ்ஸி தனதுதேசத்திற்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார். தனது தேசத்தின் 36 ஆண்டு கால கோப்பை தாகத்தை தீர்த்து வைத்துள்ளார். தற்போது அர்ஜெண்டினா கோப்பையை வென்றதன் மூலம் ஐரோப்பிய அணிகளின் 20 ஆண்டுகள் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடைசியாக தென் அமெரிக்காவைச் சேர்ந்தபிரேசில் 2002-ம் ஆண்டு கோப்பையை வென்றிருந்தது. அதன் பின்னர் ஐரோப்பிய அணிகளே (2006 – இத்தாலி, 2010-ஸ்பெயின், 2014-ஜெர்மனி,2018- பிரான்ஸ்) பட்டம் வென்றிருந்தன. 2006-ம்ஆண்டு உலகக் கோப்பையில் அறிமுகமான லயோனல் மெஸ்ஸி 16 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுஉலக சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்துள்ளார். 2014-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் அர்ஜெண்டினா தோல்வி கண்டது. அப்போது மெஸ்ஸிதொடரின் சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருதை வென்றார். எனினும் அதை அவர், கையில் பெற்றுக் கொண்டு தலையை குனிந்தவாறுதான் மேடையில் இருந்து இறங்கினார். அவர் அன்று சிந்திய கண்ணீரை இன்று 18 காரட்டால் செய்யப்பட்ட உலக கோப்பை சாம்பியன் பட்டம் துடைத்தெறிந்துள்ளது.

சாம்பியன் பட்டம் வென்ற குதூகலத்தில்ஓய்வு பெறும் திட்டத்தையும் தற்போதைக்கு தள்ளி வைத்துள்ளார் மெஸ்ஸி. இதுதொடர்பாக மெஸ்ஸி கூறும்போது, “வெற்றியின் தருணத்தை நம்ப முடியவில்லை. ஆனாலும் எனக்குத் தெரியும் இறைவன் இந்தக் கோப்பையை எனக்கு அளிப்பார் என்று. இதில் நான் உறுதியாக இருந்தேன். இந்த கனவை நான் நீண்ட நாள் கொண்டிருந்தேன். நான் எனது பயணத்தை இந்த உலகக் கோப்பையுடன் நிறைவு செய்யவே ஆசைப்பட்டேன். ஆனால் இப்போது அதை முடித்துக் கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். சாம்பியனாக தேசிய அணிக்காக விளையாடுவேன்” என்றார்.

ஆடு… மெஸ்ஸி…: சமூக வலைதளங்களில் லயோனல் மெஸ்ஸிக்கு வாழ்த்து தெரிவிக்கும் அனைவரும், #Messi என பதிவிட்டு வருகின்றனர். மெஸ்ஸியின் பெயர் அருகே ஏன் இந்த ஆட்டின் படம் உள்ளது என பலரும் குழம்பினர்.

சமகாலம் மட்டுமின்றி எல்லாகாலத்திலும் மிகச் சிறந்தவர் என்பதை குறிக்கும் Greatest Of All Time-ன் சுருக்கமே GOAT எனசமூகவலைதளங்களில் அழைக்கப்படுகிறது. அந்த GOAT என்ற சொல் ஆங்கிலத்தில் ஆடு என பொருள்படுவதால் ரசிகர்கள் பலர் ஆடு படம் பயன்படுத்தி மெஸ்ஸிக்கு வாழ்த்து வருகின்றனர்.

அங்கி அணிவிப்பு ஏன்?: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் பரிசளிப்பு விழாவின் போது கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி அந்நாட்டின் கவுரவமிக்க பிஷ்ட் (Bisht) அங்கியை மெஸ்ஸிக்கு அணிவித்து கவுரப்படுத்தினார். இந்த அங்கி தூய்மையான தங்கத்தால் செய்யப்பட்டது.

வளைகுடாவில் பல நூற்றாண்டுகளாக விசேஷ காலங்களில் இந்த ஆடை அணியப்படுகிறது. இது பாராட்டு, மரியாதையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. பொதுவாக அரசியல்வாதிகள், ஷேக்குகள், உயர் அந்தஸ்துள்ள அதிகாரிகளால் இந்த ஆடை அணியப்படுகிறது.

மிரண்டு போன கூகுள்: கூகுள் நிறுவன செயல் அதிகாரி சுந்தர்பிச்சை தனதுட்விட்டர் பதிவில்,“ நேற்று இரவு மக்கள் எல்லோரும் ஒரே விஷயத்தை தேடி உள்ளனர். உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியின்போது கூகுள் தேடல் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான டிராஃபிக்கைப் பதிவு செய்தது. இது முழு உலகமும் ஒன்றைப்பற்றித் தேடுவதுபோல் இருந்தது. உலகில் இதற்கு முன் கடந்த 25 வருடங்களில் இவ்வளவு பெரிய அளவில் மக்கள் எதை பற்றியும் தேடியது இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இலவச சிக்கன் பிரியாணி..: உலகக் கோப்பையில் அர்ஜெண்டினாவின் வெற்றியை கொண்டாடும் வகையில் கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இனிப்புகள் மற்றும் உணவுகள் இலவசமாக வழங்கப்பட்டது. திருச்சூரில் ஓட்டல் நடத்தி வரும் பி.ஷாஜி என்பவர் 1,500 பிளேட் சிக்கன் பிரியாணியை ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கினார்.

> உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் 26 ஆட்டங்களில் பங்கேற்று அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் மெஸ்ஸி. இதில் 16 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளார்.

> உலகக் கோப்பைகளில் மெஸ்ஸி 19 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதன் மூலம் அதிக ஆட்டங்களில் அணியை வழிநடத்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த வகையில் மெக்சிகோவின் ரஃபா மார்க்வெஸ் 17 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

> உலகக் கோப்பைகளில் மெஸ்ஸி 2,314 நிமிடங்கள் விளையாடி உள்ளார். இந்த வகையில் இத்தாலியின் பாவ்லோ மால்டினியின் (2,217 நிமிடங்கள்) சாதனையை முறியடித்துள்ளார்.

> 5 உலகக் கோப்பைகளில் விளையாடி உள்ள மெஸ்ஸி அனைத்திலும் கோல்கள் அடிக்க உதவி செய்துள்ளார். இதுவரை எந்த ஒரு வீரரும் இதை செய்தது இல்லை.

> மெஸ்ஸி தான் அறிமுகமான 2006 உலகக் கோப்பையில் அடித்த முதல் கோலுக்கும் தற்போது கத்தாரில் அடித்த கடைசி கோலுக்கும் இடைப்பட்ட காலம் 16 வருடங்கள் 184 நாட்கள் ஆகும்.

> உலகக் கோப்பைகளில் மெஸ்ஸி 2-வது முறையாக சிறந்த வீரராக தேர்வாகி உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டும் அவர், கோல்டன் பால் விருது வென்றிருந்தார். எந்த ஒரு வீரரும் இருமுறை இந்த விருதை இதற்கு முன்னர் வென்றது இல்லை.

> கத்தாரில் மெஸ்ஸி 7 கோல்கள் அடித்தார். 3 கோல்கள் அடிக்க உதவி செய்தார்.

> தென் அமெரிக்க கால்பந்து வீரர்களில் சர்வதேச தொடர்களில் 26 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார் மெஸ்ஸி. இதில் 13 கோல்கள் உலகக் கோப்பைகளில் அடிக்கப்பட்டவை.

What do you think?

Legend

Written by Hindu Tamil

Content Author

Leave a Reply

GIPHY App Key not set. Please check settings

வரலாறு படைத்தது இங்கிலாந்து – முதல் முறையாக சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் தோல்வி அடைந்த பாகிஸ்தான்

அர்ஜென்டினா வெற்றிக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்திய கேரள ரசிகர்கள்