மதுரை: வரலட்சுமி விரதம் இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடும் நிலையில் வரலட்சுமி நோன்பு இருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும், வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் கைகளில் கட்டும் நோன்புக்கயிற்றில் 9 முடிச்சு போடுவதன் தத்துவம் போன்றவைகளைப் பார்க்கலாம்.
வரலட்சுமி விரதம்: எந்த வீட்டில் பெண்கள் வரலட்சுமி நோன்பிருந்து முறைப்படி பூஜை செய்கிறார்களே, அந்த வீட்டிற்கு அன்னை மகாலட்சுமி வருவதாகவும்,அருள் ஆசி வழங்குவார் என்பதும் ஐதீகம். வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும். வரலட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும். வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும் என்பது நம்பிக்கை.
16 வகை செல்வங்கள்: பதினாறு வகை செல்வத்தையும் வழங்கக்கூடிய மகாலட்சுமி தேவியை நினைத்து இருப்பது வரலட்சுமி விரதம். திருமணமான பெண்கள் பூஜை முடியும் வரை சாப்பிடாமல் விரதத்தை கடைப்பிடிப்பார்கள்.மங்களத்தையும், மாங்கல்ய பலத்தையும் அளிக்கக்கூடிய இந்த விரதத்தை கன்னிப் பெண்களும், திருமணமான சுமங்கலி பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
என்ன சாப்பிடலாம்: வரலட்சுமி பூஜைக்காக விரதம் இருப்பவர்கள் சில உணவுகளை சாப்பிடலாம். வாழைப்பழம் வலிமையை வளர்க்க மிகவும் உதவியாக இருக்கும் ஒரு பழம். பொட்டாசியம் நிறைந்த, வாழைப்பழத்தில் இயற்கை குளுக்கோஸ் உள்ளது, இது ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது.விரதம் இருப்பவர்கள் இதை சாப்பிடலாம். விரதம் இருப்பவர்கள் ஒரு கப் பால் சாப்பிடலாம் இது தூய்மையானதாகக் கருதப்படுகிறது. பால் சாப்பிடாதவர்கள் பழச்சாறுகள் சாப்பிடலாம் அல்லது துளசி தீர்த்தம் சாப்பிடலாம்.
9 முடிச்சு நோன்புக்கயிறு: வரலட்சுமி பூஜை செய்வதற்கு முன்பாக விநாயகர் வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். வரலட்சுமி பூஜையை மனநிறைவோடு செய்ய வேண்டும். ஒன்பது முடிச்சு இருக்கும் நோன்புக்கயிறு அவசியம். அம்மன் அலங்காரம் செய்த உடன் முடிக்கயிறு தயாரிக்கும் போது 9 முடிச்சுகள் போட்டிருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலையில் நல்ல நேரத்தில்தான் இந்த முடிச்சி போடவேண்டும். அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியை சேர்த்து 9 லட்சுமிகள் என்பதை குறிக்கும் வகையில் 9 முடிச்சு கொண்ட நோன்பு கயிறு கட்டிக்கொள்கின்றனர். வயது மூத்த சுமங்கலிகள் கையால் நோன்புக்கயிறு கட்டிக்கெள்ள வேண்டும்.

வரலட்சுமி நோன்பு கயிறு கட்டும் போது சொல்லும் மந்திரம்: ஒன்பது முடிச்சுகளிட்ட கயிற்றை, 'நவதந்து ஸமாயுக்தம் நவக்ரந்தி ஸமன்விதம் பத்னீயாம் தட்சிணே ஹஸ்தே தோரகம் ஹரிவல்லபே' என்ற மந்திரத்தை உச்சரித்து வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இந்த மந்திரத்தின் அர்த்தம் நாராயணின் மனைவியான மகாலட்சுமியே ஒன்பது இழைகளும் ஒன்பது முடிச்சும் கொண்ட இந்த மஞ்சள் கயிற்றினை பிரசாதமாக ஏற்று வலது கையில் கட்டிக்கொள்கிறேன். எனக்கு நீ அருள்புரிய வேண்டும் என்று சொல்லி வணங்க வேண்டும்.
பூஜை செய்ய நல்ல நேரம்: வரலட்சுமியை நினைத்து மனதில் பக்தியுடன் சந்தோஷத்துடன் பூஜை செய்ய வேண்டும். வரலட்சுமி பூஜைக்கு சுமங்கலி பெண்களை அவசியம் அழைப்பது அவசியம். வரலட்சுமி விரதத்தை காலை தொடங்கினாலும் மாலையில் பூஜை செய்யலாம். மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி பூஜையை தொடங்குவது நல்லது. வரலட்சுமி விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது அனுஷ்டித்து வந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும் என்பது ஐதீகம். நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் உண்டாகும் என்பது நம்பிக்கையாகும்.
English summary
Varalakshmi Viratham Pooja time Pooja vithi 9 Mudichi Nonbu Kayiru Thathuvam: (வரலட்சுமி விரதம் 9 முடிச்சு நோன்பு கயிறு தத்துவம்)As the Varalakshmi fast is going to be observed tomorrow, 25th August 2023 Friday. Let's know what this fast is like, what are the benefits of Varalakshmi fasting, and the best time to perform Varalakshmi Poojai.
Story first published: Friday, August 25, 2023, 8:32 [IST]