வங்கிகளின் நோக்கத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது: சிஐடியு குற்றச்சாட்டு

1 month ago 9

செய்திப்பிரிவு

Last Updated : 13 Aug, 2023 04:05 AM

Published : 13 Aug 2023 04:05 AM
Last Updated : 13 Aug 2023 04:05 AM

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் 11-வது அகில இந்திய மாநாட்டை சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன் சென் சென்னையில் தொடங்கி வைத்து உரையாற்றினார். உடன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் சி.ஜெ.நந்தகுமார், பொதுச் செயலாளர் தேபாசிஷ் பாசு சவுத்ரி உள்ளிட்டோர்.
<?php // } ?>

சென்னை: வங்கிகளின் நோக்கத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்று சிஐடியு தேசிய பொதுச் செயலாளர் தபன் சென் கூறினார்.

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (பெஃபி) 11-வது தேசிய மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். சம்மேளனத் தலைவர்சி.ஜெ.நந்தகுமார் தலைமை வகித்தார். மாநாட்டைத் தொடங்கி வைத்து சிஐடியு தேசியப் பொதுச்செயலாளர் தபன்சென் பேசியதாவது:

வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதன் உன்னத நோக்கத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. வங்கிகளின் தனியார் மயமாக்கலுக்கு எதிராகவும், பொதுத் துறை வங்கிகளை இணைப்பதைக் கண்டித்தும், வங்கிக் கிளைகள் மூடப்படுவதை எதிர்த்தும் வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.

வங்கி ஊழியர்களின் போராட்டம், பொதுத் துறை வங்கிகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம் மட்டுமல்ல. சுயசார்பு பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் போராட்டமாகும். நவீன, தாராளமய பொருளாரதாரக் கொள்கைகள் அமலுக்கு வந்த பின்னர், வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள நாசகரமான விளைவுகளை வங்கி ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

வங்கிகள் இணைக்கப்படுகின்றன. வங்கிக் கிளைகள் மூடப்படுகின்றன. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் அதிக அளவில் இது நடைபெறுகிறது. இதுகுறித்து இந்த மாநாட்டில் தீவிரமாக விவாதிக்கப்படும். பொதுத்துறை வங்கிகள் பெருநிறுவனங்களுக்கு வழங்கிய கடன்கள் பெருமளவு ஏமாற்றப்பட்டு உள்ளன.

இது மக்களுடைய பணம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடித்தால் மட்டும் போதாது. மக்கள் விரோத, தேச நலனுக்கு எதிரான, தாராளமய, தனியார் மய பொருளாதாரக் கொள்கைகளும் தோற்கடிக்கப்பட வேண்டும். அத்தகைய போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்த மாநாடு அமையும் என்றார் தபன்சென்.

முன்னதாக, டவுட்டன் ஒய்எம்சிஏ வளாகம் அருகில் இருந்து மாநாட்டுத் திடல் வரை வங்கி ஊழியர்கள் பேரணி நடைபெற்றது. சம்மேளனப் பொதுச் செயலர் தேபசிஷ் பாசு சவுத்ரி, தேசிய இணைச் செயலர் சி.பி.கிருஷ்ணன், தமிழ் மாநிலத் தலைவர் சுனில்குமார், பொதுச் செயலர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தவறவிடாதீர்!

Read Entire Article