இது போன்ற காரணங்களால் நம்மில் பலருக்கும் தரமான தூக்கம் கிடைப்பது என்பது அரிதாக மாறி வருகிறது. சரியாக தூங்காவிட்டால் சோர்வாக இருக்கும் என்பதை தவிர மோசமான தூக்கப் பழக்கம் என்பது நம் உடல்நலம், மனநிலை மற்றும் உற்பத்தித்திறனை நாம் நினைத்து பார்க்காத வகையில் மறைமுகமாக கடுமையாக பாதிக்கும். நன்கு தூங்குவது ஏன் முக்கியம், உங்களுக்கு போதுமான தூக்கம் இல்லை என்பதற்கான அறிகுறிகள் மற்றும் சிறந்த தூக்கத்தை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இங்கே புரிந்து கொள்வோம்.
தூக்கத்தின் போது தான் நம் உடல் அத்தியாவசிய பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும். இது தெரிந்து கூட நம்மில் பலர் மோசமான தூக்கப் பழக்கத்தை நீண்ட வேலை நேரம், மன அழுத்தம் அல்லது இரவு நேர சமூகமயமாக்கல் என ஏதாவதொரு காரணத்தை கூறி சமாதானப்படுத்திக் கொள்கிறோம். ஆனால் இது மெதுமெதுவாக நம் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது என்பதை பலரும் உணர்வதில்லை. பகல்நேரத்தில் தூக்கம் வருவது மற்றும் அடிக்கடி கொட்டாவி விடுவது போன்ற வெளிப்படையாக தெரியும் அறிகுறிகளை தவிர்த்து உங்கள் உடலுக்கு தேவையான நல்ல தூக்கம் உங்களுக்கு இல்லை என்பதை வெளிப்படுத்தும் சில ஆச்சரிய அறிகுறிகளை தெரிந்துகொள்ளலாம்.
அடிக்கடி ஏற்படும் காலை நேர தலைவலி: உங்களின் இரவு தூக்கம் மோசமானதாக இருந்தால் மூளையில் ஆக்ஸிஜன் அளவு மற்றும் ரத்த ஓட்டம் சீர்குலைந்து, பெரும்பாலும் காலை நேரத்தில் தலைவலி ஏற்பட வழிவகுக்கும். நீங்கள் பல நாட்கள் தொடர்ந்து லேசான அல்லது வீரியமிக்க தலைவலியுடன் எழுந்தால், அது உங்கள் தூக்கத்தின் தரம் குறைவாக இருப்பதை குறிக்க கூடும்.
நினைவாற்றல் குறைபாடுகள்: நம்முடைய நினைவாற்றலை ஒருங்கிணைக்க சிறந்த தூக்கம் மிக முக்கியமானது. உங்களால் திடீரென்று எளிய விஷயங்களை கூட மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளவோ அல்லது வேலையில் கவனம் செலுத்தவோ இயலாமல் சிரமம் ஏற்பட்டால், நீங்கள் தூக்கம் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம்.
ஜங்க் ஃபுட்ஸ்களுக்கான ஏக்கம் அதிகரித்தல்: NIH வெளியிட்ட ஆய்வின்படி தொடர்ந்து மோசமான தூக்கம் இருப்பது பசி ஹார்மோனான ghrelin-ன் அளவை அதிகரிப்பதாகவும், வயிறு நிரம்பிய திருப்தி உணர்வை ஏற்படுத்தும் leptin ஹார்மோன் அளவை குறைப்பதாகவும் தெரிகிறது. மோசமான தூக்கத்தால் ஏற்படும் இந்த விளைவு அதிக கலோரி, சர்க்கரை உணவுகளுக்கான தீவிர ஏக்கத்தை தூண்டுகிறது.
மனநிலை மாற்றங்கள் மற்றும் எரிச்சல் உணர்வு: போதுமான தூக்கம் இல்லாவிட்டால் பல நாட்களுக்கு இருப்பது நம் மூளையின் உணர்ச்சி செயலாக்கப் பகுதிகளை பாதிக்கலாம், இது எதற்கெடுத்தாலும் எரிச்சல் உணர்வை வெளிப்படுத்துவது, பதற்ற உணர்வு மற்றும் மூட் ஸ்விங்ஸ் போன்றவை ஏற்பட வழிவகுக்கும்.
சரும ஆரோக்கியத்தை மோசமாக்கும்: மோசமான தூக்கம் என்பது வயதாகும் செயல்முறையை துரிதப்படுத்தி சருமத்திலிருக்கும் ஹைட்ரேஷனை குறைத்து சருமம் பொலிவிழக்க, முகப்பரு மற்றும் முன்கூட்டிய சரும சுருக்கங்கள் ஏற்பட பங்களிக்கும்.
மன அழுத்தத்தை சமாளிப்பதில் சிரமம்: தொடர் தூக்கமின்மை prefrontal cortex-ஐ பாதிக்கிறது, இதனால் மன அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்கும் நம் திறன் கணிசமாக குறைகிறது. சிறிய பிரச்சனைகள் அல்லது தொந்தரவுகளை கூட கையாள முடியாமல் ஏதோ பெரிய பிரச்சனையை போல உணருவது தூக்கத்தின் தரம் குறைவாக இருப்பதை குறிக்கலாம்.
போதுமான தூக்கம் இருந்தாலும் ஆற்றல் குறைவு: ஸ்லீப் ஹெல்த் இதழில் வெளியான ஒரு ஆய்வானது, சிலர் போதுமான மணிநேரம் படுக்கையில் தூங்க நேரம் செலவழித்தாலும் கூட ஆற்றல் அளவில் சரிவை சந்திக்கிறார்கள். இதற்கு அவர்களின் தூக்கத்தின் தரம் மோசமாக இருப்பதே காரணம், இதன் காரணமாகவே குறைந்த ஆற்றலால் பாதிக்கப்படுகிறார்கள் என கூறியுள்ளது. இங்கு தூங்குவது மட்டும் முக்கியமல்ல, நீங்கள் தூங்கும் தூக்கம் தரமாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக குறைந்தபட்ச இடையூறுகளுடன் இரவு முழுவதும் நன்கு தூங்குவது. ஒருவேளை தூக்கத்தின் போது இடையிடையே தொந்தரவு அதிகம் ஏற்பட்டால் அது மோசமான தூக்கத்தையே குறிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பது: சிடிசி நடத்திய ஆராய்ச்சியின்படி மோசமான தூக்கம் நோயெதிர்ப்பு செயல்பாட்டை கணிசமாக பாதிக்கிறது. இதன் காரணமாக அடிக்கடி சளி, காய்ச்சல் மற்றும் பிற தொற்றுகளுக்கு ஆளாகும் அபாயமும் அதிகரிக்கிறது. நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டால், அது உங்கள் தூக்கம் சிறப்பாக இல்லாததன் காரணமாகவும் இருக்கலாம்.
மலச்சிக்கல் அல்லது வயிறு உப்புசம்: மோசமான தூக்கம் என்பது நம் குடல் நுண்ணுயிரிகளையும், செரிமானத்திற்கான ஹார்மோன் ஒழுங்குமுறையையும் பாதித்து வயிறு உப்புசம், மலச்சிக்கல் அல்லது அஜீரணம் போன்ற செரிமானம்சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கிறது.
தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும் டிப்ஸ்கள்:
- வார நாட்களில் மட்டுமல்ல வார இறுதி நாட்களில் கூட, சீரான தூக்க அட்டவணையை பின்பற்றுங்கள். அதாவது எல்லா நாட்களிலும் இரவில் ஒரே நேரத்தில் தூங்க சென்று, காலை ஒரே நேரத்தில் எழுங்கள்.
- தூங்க செல்வதற்கு குறைந்தது 4-6 மணி நேரத்திற்கு முன் காஃபின் மற்றும் ஹெவியான உணவு சாப்பிடுவதை தவிர்க்கவும்.
- நீங்கள் தூங்கும் அறை இருட்டாக, அமைதியாக இருக்குமாறு மற்றும் நன்கு ஆழ்ந்து தூங்க ஏற்ற சூழலை கொண்டிருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
- மெலடோனின் உற்பத்தி சீர்குலைவதை தவிர்க்க, தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மொபைல், லேப்டாப் போன்ற டிஜிட்டல் ஸ்கிரீன் மற்றும் டிவைஸ்களை பயன்படுத்துவதை நிறுத்தி கொள்ளுங்கள்.
- தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசம் போன்ற ரிலாக்ஸாக உதவும் விஷயங்களை பயிற்சி செய்யுங்கள்.
இந்த டிப்ஸ்களை முயற்சித்தும் தூங்குவதில் சிக்கல்கள் தொடர்ந்தால் நிபுணரை அணுகவும். தூக்கம் என்பது நம் ஆரோக்கியத்தின் அடிப்படைத் தூணாகும். மோசமான தூக்கம் உங்களுக்கு இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளைப் புறக்கணிப்பது நாள்பட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
நியூஸ்18 தமிழின் லைஃப்ஸ்டைல் கேட்டகிரியானது, உடல்நலம், உணவு, டிராவல், ஃபேஷன், சமையல் குறிப்புகள் மற்றும் பலவற்றைப் பற்றிய சமீபத்திய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது.
First Published :
September 20, 2025 6:04 PM IST