டொனால்டு ட்ரம்ப்பை அடுத்த வாரம் சந்திப்பேன்: ஜெலன்ஸ்கி தகவல்

2 days ago 5

Last Updated : 20 Sep, 2025 06:13 PM

Published : 20 Sep 2025 06:13 PM
Last Updated : 20 Sep 2025 06:13 PM

<?php // } ?>

கீவ்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை அடுத்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தின்போது சந்திக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அந்நாட்டுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளார். நேற்று ஒரே இரவில் உக்ரைன் மீது 40 ஏவுகணைகள் மற்றும் 580 ட்ரோன்களை ரஷ்யா ஏவியதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இந்த சரமாரியான தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபருடான சந்திப்பின்போது, உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை வலியுறுத்த இருப்பதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். மேலும், ரஷ்யாவைக் கட்டுப்படுத்த அந்த நாட்டுக்கு எதிராக கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க வலியுறுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். "ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்புக்கு நான் தயாராக இருக்கிறேன். இது குறித்து நான் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். இருதரப்பு பேச்சுவார்த்தை அல்லது முத்தரப்பு பேச்சுவார்த்தை இரண்டுக்கும் நான் தயார். ஆனால், அவர்தான் தயாராக இல்லை.

தலைவர்களிடையேயான சந்திப்பு நடக்க வாய்ப்பில்லை என்றால், அதாவது போர் நிறுத்தம் இல்லாவிட்டால் ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் விதிக்க வேண்டும். ரஷ்யா, உக்ரைனின் உள்கட்டமைப்புகளை அழிக்கிறது. பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது. எனவே, ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச பதிலடி தேவை. உக்ரைன் தன்னையும் ஐரோப்பாவையும் பாதுகாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. நாம் ஒன்றாக செயல்பட வேண்டும்.

வான் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். ஆயுத விநியோகங்களை அதிகரிக்க வேண்டும். ரஷ்ய ராணுவத்துக்கு நிதி அளிக்கும் துறைகளுக்கு எதிரான தடைகளை விரிவுபடுத்த வேண்டும். ரஷ்யா மீதான ஒவ்வொரு கட்டுப்பாடும் உயிர்களைக் காக்கிறது. எங்களுக்கு உதவும், ஆதரிக்கும் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...

Follow

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

Read Entire Article