Last Updated : 20 Sep, 2025 07:29 AM
Published : 20 Sep 2025 07:29 AM
Last Updated : 20 Sep 2025 07:29 AM

மனிதனை ஆச்சர்யமூட்டிய ஏராளமான உயிரினங்கள் உண்டு. உதாரணத்துக்கு, நம்மூரில் சிறுவர்களுக்குத் தொட்டால் சிணுங்கி தாவரம் மீது எப்போதும் பெரும் ஈர்ப்பு உண்டு. இலையை தொட்டவுடன் மூடிக்கொள்ளும் அந்தத் தாவரம் எப்போதும் நமக்கு ஆச்சரியத்தைத் தந்துகொண்டே இருக்கும். இதுபோன்ற எத்தனையோ உயிரினங்களைச் சொல்ல முடியும்.
அந்த வகையில், பூச்சியுண்ணும் தாவரங்கள் மனிதர்களைப் பெரும் வியப்படையச் செய்தன. நம்மூரில் ஏற்காடு மலைக்குச் சுற்றுலா செல்லும் பலரும், அங்குள்ள தாவரவியல் பூங்காவில் உள்ள பூச்சியுண்ணும் தாவரங்களைப் பார்த்து அதிசயத்துப் போவார்கள்.
உயிரினங்களின் தோற்றம் பற்றிய உண்மைகளைக் கண்டறிந்த சார்லஸ் டார்வின், பூச்சி உண்ணும் தாவரங்கள் பற்றிய புத்தகத்தை 1875-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி வெளியிட்டார். இந்த ஆராய்ச்சி நூலைப் படித்த பலரும் வியப்பில் ஆழ்ந்து போனார்கள். இந்நூலை அடிப்படையாக வைத்து ஐரோப்பிய நாடுகளில் ஏராளமான புனைவுகள் வந்தன.
மனிதர்களைக் கொன்று தின்னும் தாவரங்கள் பற்றிய கற்பனையான பல நாவல்களை எழுதினர். ஹாலிவுட்டில் பல சினிமாக்கள் வந்தன. இந்நிலையில், பூச்சியுண்ணும் தாவரங்கள் பற்றியும், அந்தத் தாவரங்கள் பற்றிய உண்மைகள், கற்பனைகள், புனைவுகள் பற்றியும் ‘அசைவம் உண்ணும் தாவரங்கள்’ என்ற இந்நூலின் மூலம் ஏற்காடு இளங்கோ விளக்கமாகக் கூறியிருக்கிறார்.
அடிப்படையில் அவர் தாவரவியல் ஆய்வாளர் என்பதாலும், பூச்சியுண்ணும் தாவரங்கள் இருக்கும் ஏற்காடு தாவரவியல் பூங்காவில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் என்பதாலும், இந்நூலை நுட்பமான பல தகவல்களோடு எழுதியிருக்கிறார். சில வகை தாவரங்கள் மட்டும் பூச்சிகளை உண்பதற்கான காரணங்கள் பற்றியும், பூச்சியுண்ணும் தாவர வகைகள் பற்றியும், மனிதர்களைக் கொல்லும் தாவரங்கள் போன்ற கற்பனைகள் பற்றியும் இந்நூலில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
அசைவம் உண்ணும் தாவரங்கள்
ஏற்காடு இளங்கோ
இந்து தமிழ் திசை வெளியீடு
விலை: ரூ. 250
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562
திண்ணை | சிந்துவெளி கருத்தரங்கம்: சிந்துவெளி நாகரிகம் உலகுக்கு அறிவிக்கப்பட்ட நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மதுரையில் இன்று (20-09-2025, சனிக்கிழமை) கருத்தரங்கம் நடைபெறுகிறது.
விராட்டிப்பத்து வி.வி.எம். மகாலில் காலை 10 மணி முதல் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன், தொல்லியல் துறை இயக்குநர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா, எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன், மதுக்கூர் ராமலிங்கம், ஆதவன் தீட்சண்யா, சு.வெங்கடேசன் எம்.பி.
உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...
Follow